Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

$
0
0
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

சோழப் பெருமன்னர் காலத்திலிருந்த நம்பியாண்டார் நம்பி, நாயன்மார் பாடல்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்ததைப்பற்றிச் சென்ற பாடத்தில் பார்த்தோம். இதற்கு முன்னோடியாக ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களைத் தேடிப் பெற்று நாதமுனி, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் எனத் தொகுத்துள்ளார் என்றும் பார்த்தோம்.
நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ‘திவ்வியம்’ என்பது அடியவர்களுக்கு இன்பம் அளிப்பது என்ற பொருளில் இனிமை என்னும் பொருளைத் தரும். ‘பிரபந்தம்’ என்பது ‘தொகுப்பு’ என்றும் ‘தனி நூல்’ என்றும் பொருள் தரும் என்பர். எனவே, திவ்வியப் பிரபந்தம் என்பது, தெய்வத்தின் திவ்விய குணங்களைப் போற்றும் பிரபந்தங்களின் தொகுப்பு என்று பொருள் தரும். இதைத் திராவிட வேதம் என்பர்.
தெளிவு, கனிவு, பக்திச்சுவை, ஓசை இனிமை எனப் பல சிறப்புகளைக் கொண்ட இப்பாடல்கள், சமணபௌத்த முனிவர்களின் புறவேடங்களால் ஒருவன் பெறும் பயன் ஒன்றுமில்லை என்றும் இறைவனை நாள்தோறும் நினைப்பதன் வாயிலாகவே அவனருளைப் பெற்றுப் பயன்பெற முடியும் என்றும் எடுத்துக்காட்டுகின்றன.
பாடல்களின் தொகை 4000 என்று தொகை சுட்டுவதில் மூன்று முறைகள் பின்பற்றப்படுவதாகத் தோன்றுகிறது.
1. பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு (12 பாடல்கள்), திருமொழி (461 பாடல்கள்), ஆண்டாள் பாடிய திருப்பாவை (30 பாடல்கள்), நாச்சியார் திருமொழி (143 பாடல்கள்), குலசேகரப் பெருமாள் பாடிய பெருமாள் திருமொழி (105 பாடல்கள்), திருமழிசை ஆழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம் (120 பாடல்கள்), தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலை (45 பாடல்கள்), திருப்பள்ளியெழுச்சி (10 பாடல்கள்), திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் (10 பாடல்கள்), மதுரகவி ஆழ்வார் அருளிய கண்ணி நுண் சிறுத்தாம்பு (11 பாடல்கள்) எனத் தொகுக்கப்பட்டுள்ள 947 பாடல்கள் முதலாயிரம் எனப்படுகின்றன.
திருமங்கை ஆழ்வார் பாடிய பெரியதிருமொழி (1084 பாடல்கள்), திருக்குறுந்தாண்டகம் (20 பாடல்கள்), திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்) எனத் தொகுக்கப்பட்டுள்ள 1134 பாடல்கள் இரண்டாமாயிரம் எனப்படுகின்றன.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி (1102 பாடல்கள்) மூன்றாமாயிரம் எனப்படுகிறது.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் பாடிய மூன்று திருவந்தாதிகள் (3x100 பாடல்கள்), திருமழிசை ஆழ்வார் பாடிய நாலாம் திருவந்தாதி ஆகிய நான்முகன் திருவந்தாதி (96 பாடல்கள்), நம்மாழ்வார் அருளிய திருவிருத்தம் (100 பாடல்கள்), திருவாசிரியம் (7 பாடல்கள்), பெரிய திருவந்தாதி (87 பாடல்கள் ), திருமங்கை மன்னன் பாடிய திருஎழுகூற்றிருக்கை (1), சிறிய திருமடல் (1), பெரிய திருமடல் (1) எனப் பத்துப் பிரபந்தங்களில் அடங்கிய 593 பாடல்கள் நான்காமாயிரம் எனப்படுகின்றன. இப்பகுதி ‘இயற்பா’ என்ற அடிப்படையில் தொகுக்கப் பெற்றுள்ளது. ஆக, நான்கு தொகுதிப் பாக்களின் எண்ணிக்கை 3776 என வருகிறது. நாலாயிரத்துக்கு 224 பாடல்கள் குறைவாக இருப்பதில் தவறில்லை என்பர் சிலர்.
2. பெரிய திருமடல் சிறிய திருமடல் பாசுரங்களை 771/2, 1481/2 என்று கணக்கிட்டு 4000 எனக் கொள்கின்றனர் சிலர்.
3. இப்பகுதியிலுள்ள சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகியவற்றில் உள்ள கண்ணிகளைக் கருத்தில் கொண்டு தமிழ் யாப்பு நெறிக்கு உட்பட்டு வேதாந்த தேசிகர் என்பவர் முறையே 40, 78 என்று பாசுரங்களாகக் கணக்கிட்டு 118 பாடல்களாகக் கொள்கிறார். ஆகப் பாடல் எண்ணிக்கை 719 என்று கொண்டு அத்துடன் இரண்டு நூற்றாண்டுகள் பின்னர்த் தோன்றிய இராமநுச நூற்றந்தாதிப் பாடல்கள் 108 ஐயும் சேர்த்து 817 பாடல்கள் என்று அவர் கொள்கிறார். மொத்தமாக நான்கு பகுதிகளிலுமுள்ள 947, 1134, 1102, 817 என்று பாடல்களின் தொகையைக் கூட்ட 4000 பாடல்கள் என்ற எண்ணிக்கை கிடைக்கிறது.
மற்றொரு தொகுப்பு முறையில் திருவாய்மொழியினை நான்காமாயிரமாகக் கொண்டு, இயற்பாத் தொகுதியை மூன்றாமாயிரமாகக் கொள்வதுமுண்டு, முதலிரண்டு ஆயிரம் என்ற வரிசையில் மாற்றமில்லை.
நாதமுனிகள் தொகுத்தபொழுது நாலாயிரம் என்று பெயர் கொடுக்கவில்லை என்பதும், அது பின்னால் சூட்டப்பட்ட பெயர் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது.
நாதமுனிகள் நான்கு தொகுதிகளுக்கும்
1. முதலாயிரம்
2. திருமொழி
3. திருவாய்மொழி
4. இயற்பா
என்றே தனித்தனியே பெயரிட்டுத் தொகுத்தார்.

New Page 1

Viewing all articles
Browse latest Browse all 5709

Latest Images

Trending Articles



Latest Images