Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Quotable Quotes Part II

$
0
0
#076 to #080

#76. பாராமுகம் உண்மையை உணர்த்தியது

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன் மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர்ந்தோமால்.


தத்துவத்தையும், முத்தமிழையும், வேதத்தையும் பெரிதும் நுகர்ந்து அனுபவித்தேன் நான். அந்த வேளையில் உடலுக்கு இதமான உணவையும் கூட உண்ணாமல் இருந்து வந்தேன் நான். மனம் தெளிந்து விருப்பு வெறுப்பு என்ற இரண்டும் இல்லாமல் நான் உதாசினமாக இருந்ததால் உண்மைப் பொருளை உணர்ந்தேன்.


#77. திருக் கூத்தைக் கூற வந்தேன்!


மாலாங்க னேயிங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளோடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே.


மாலாங்கன் என்னும் என்னுடைய மாணவனே! தென் திசைக்கு நான் வந்த காரணம் இதுவே. நீல நிற மேனியையும், சிறந்த அணிகலன்களையும் உடைய சிவகாமி தேவியுடன், மூலாதாரத்தை இடமாகக் கொண்டு சதாசிவன் நடத்தும் ஐந்தொழிக் கூத்தின் சிறப்பை விளக்கும் வேதத்தை எல்லா மக்களுக்கும் எடுத்துக் கூறுவதற்காகவே.

உலகைப் படைக்கும் ஆற்றல் நீல ஒளியில் உள்ளது. எனவே பராசக்தி தேவியின் நிறம் நீலம். சிவந்த ஒளி அறிவு மயமானது. அறிவு சிவ மயமானது. இந்த இரண்டு ஒளிகளின் சேர்க்கையால் உலகம் படைக்க படுகின்றது. ஐந் தொழில்கள் நடக்கின்றன. இதுவே யோகத்தின் ரகசியம் ஆகும்.

#78. பதம் சேர்ந்திருந்தேன்


நேரிழை ஆவாள் நிரதிச யானந்தப்
பேருடையாள்; என் பிறப்பு அறுத்து ஆண்டவள்;
சீருடையாள்; சிவன் ஆவடு தண்துறைச்
சீருடையாள் பதம் சேர்ந்திருந்தேனே.


சிறந்த அணிகலன்களை அணிந்தவள் பராசக்தி. சிவானந்தவல்லி என்னும் பெயர் பெற்றவள். என் பிறப்பை நீக்கி என்னை ஆட்கொண்டவள். எல்லையில்லாத சிறப்பை உடையவள் அவள். ஜீவர்களைப் பக்குவம் அடையச் செய்வதற்காகச் சிவன் எழுந்தருளிய தண்டில் சக்தியும் பொருந்தி இருப்பாள். அத்தகைய தேவியின் திருவடியில் நான் சேர்ந்திருந்தேன்.


#79. நாமங்களை ஓதினேன்


சேர்ந்திருந்தேன் சிவமங்கை தன்பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்துறை;
சேர்ந்திருந்தேன் சிவபோதியின் நீழலில்;
சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே.


உமையொரு பாகனாகிய சிவபெருமனைச் சேர்ந்து வழிபட்டேன். ஜீவர்களைப் பக்குவம் செய்யும் சிவபெருமான் உறையும்
தண்டின் உச்சியில் உள்ள சஹஸ்ர தளத்தில் சேர்ந்திருந்தேன். சிவம் என்னும் அறிவின் நீழலில் நான் சேர்ந்திருந்தேன்.
அவ்வமயம் நான் சிவன் நாமங்களை ஓதியபடி இருந்தேன்.


#80. இரவு பகல் அங்கு இல்லை!

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி;
இருந்தேன் இராப் பகல் அற்ற இடத்தே;
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே;
இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே.


எண்ணில்லாத காலம் இந்த உடலில் தங்கி இருந்தேன். இரவு பகல் என்னும் வேறுபாடுகள் இல்லாத சுயம்பிரகாசவெளியில் நான் தங்கி இருந்தேன். தேவர்கள் போற்றும் பதத்தில் நான் இருந்தேன்.என் குருநாதனான சிவபெருமானின் திருவடிகளில் நான் பொருந்தி இருந்தேன்.






#081 to #085


# 81. தமிழ் செய்யப் படைத்தான்

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்;
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.


பின்னால் தயங்கி நின்று மக்கள் மீண்டும் ஏன் பிறவியைப் பெறுகின்றனர்? முந்தைய பிறவிகளில் நன்கு முயன்று தவம் செய்யாத காரணத்தினால்! நான் நல்ல தவம் செய்திருந்தேன். இறைவன் எனக்கு நல்ல பிறவி தந்தான். தன்னைப் பற்றித் தமிழில் நூல் செய்யப் பணித்து, எனக்கு நல்ல பிறவியும், அதற்குத் தேவையான ஞானத்தையும் நல்கினான் என் குரு சிவபெருமான்.

#82. திருவடியில் பொருந்தி இருந்தேன்


ஞானத் தலைவி தன் நந்தி நகர் புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப் பாலாட்டி நாதனை அர்ச்சித்து
நானுமிருந்தேன் நற் போதியின் கீழே.


ஞானத் தலைவியான சக்தியுடன் சிவன் விளங்கும் நகரில் புகுந்தேன். ஊனம் இல்லாத ஒன்பது முடிவுகளின் சந்திப்பில் இருந்து கொண்டு, சிவனைத் தோத்திரம் செய்தென். அறிவு மயமாகிய அவன் திருவடிகளின் கீழே நானும் இருந்தேனே.

‘ஒன்பது முடிவுகளின் சந்திப்பு’ என்பது ஏழு ஆதாரச் சக்கரங்கள், நாதம், பிந்து என்ற ஒன்பது இடங்களைக் குறிக்கும்.

#83. வான் வழியே வந்தேன்


செல்கின்ற வாற்றில் சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானது மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவரசுரர் நரர் தம்பால்
ஒல்கின்ற வான் வழியூடு வந்தேனே.


கயிலையில் இருந்து வரும் பொழுது, சிவபெருமானை நினைத்து மன்மதனை வெல்லும் ஆற்றல் கொமண்ட முனிவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் இவர்களிடம் உள்ள நுட்பமான விண் வழியே நான் வந்தேன்.

#84. அத்தன் அருளினான்


சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தமமாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.

சித்தத்தில் விளங்கும் நூல்களில் சிறந்தது வேதம். சொற்களே வேதத்தின் உடல் ஆகும் என்றால் உற்பத்தியாகும் அந்த உடலில் வேதத்தின் பொருள். இறைவன் இவற்றைத் தன் கருணையால் எனக்கு அளித்தான்.

#85. சிவம் வந்து பொருந்தும்


நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்;
வான்பற்றி நின்ற மறைப்பொருள், சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வு உறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

நான் பெற்ற இன்பத்தை இந்த உலகம் முழுவதும் பெறட்டும். வானைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான். அறிவே வடிவாக அமைந்தவன் ஆவான் நம் சிவபெருமான். அவனைப் பற்றிச் சிந்தித்தால் சிரசில் ஓர் உணர்வு உண்டாகும். அந்த உணர்வை நாம் முயன்று பற்றிக் கொண்டோம் என்றால் அந்த சிவம் நம்மைத் தேடி வந்து நம்மிடம் பொருந்தி விடும்.





Viewing all articles
Browse latest Browse all 5709