Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவ

$
0
0
தினம் ஒரு திருப்பாவை

பாசுரம் - 22

எங்கள் மீது அன்பு செய்வாய் கிருஷ்ணா...#MargazhiSpecial­­­




கிருஷ்ணனின் அருள் வேண்டி வந்திருக்கும் எங்கள்மேல் இரக்கம் காட்டக்கூடாதா? உன் இரு மலர்க் கண்களைக் கொண்டு எங்களைப் பார்க்கமாட்டாயா? உன்னுடைய கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே எங்களுடைய பாவங்கள் எல்லாம் நீங்கி, அதனால் எங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிவிடுமே என்று ஆண்டாள் கிருஷ்ணனிடம் வேண்டிப் பிரார்த்திக்கிறாள். கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வந்திருப்பவர்களின் தகுதிகளைச் சொல்லும் ஆண்டாள், அப்பேர்ப்பட்டவர்கள் உன்னுடைய தரிசனத்துக்காக வந்திருக்கிறார்கள் என்றால், நீ எப்படி உன்னை ஏழை என்று சொல்லமுடியும்? விரும்பும் எதையும் தரக்கூடிய உன்னை, நீ ஏழை என்று சொல்லிக்கொண்டால், நாங்கள் அதை நம்பிவிட முடியுமா என்று கேட்பதுபோல் பாடுகிறாள்.

அங்கண்மா ஞாலத் தரசர், அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே,
சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்,
கிண்கிணி வாய்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ,
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்,
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.

அழகும், அனைத்து வளங்களும் நிரம்பப் பெற்றிருப்பதும், விசாலமான பரப்பினை உடையதுமான பெரிய பெரிய ராஜ்யங்களை ஆளும் அரசர்கள் எல்லோரும், இதுவரை தங்களுக்கு இருந்த, 'தங்களை விடவும் மேம்பட்டவர்கள் இல்லை' என்ற அகந்தையை விட்டுவிட்டனர். இந்த உலகத்தில் எப்போது உன்னை தோற்றுவித்துக் கொண்டாயோ, அப்போதே அவர்களுடைய அகந்தை நீங்கிவிட்டது. நீயே அனைவரிலும் மேம்பட்டவன் என்றும், நீயே அனைவரிலும் பெரியவன் என்றும், வல்லமை மிக்கவன் என்றும் உணர்ந்துகொண்டவர்களாக, உன்னிடம் சரண் அடைவதற்காக வந்திருக்கிறார்கள். இதுவரை சாம்ராஜ்ய சக்கரவர்த்திகள் எல்லோருமே, நமக்குமேல் இறைவன் என்று ஒருவன் இல்லை; இருந்தாலும் அவனுடைய தயவு நமக்குத் தேவையில்லை; நம்முடைய சாமர்த்தியமே போதும் என்று இறுமாப்புடன் திரிந்துகொண்டிருந்தார்கள். உன்னுடைய அவதாரம் எப்போது இந்த பூமியில் நிகழ்ந்ததோ, எப்போது உன்னுடைய லீலைகள் இந்த பூமியில் தொடங்கியதோ அப்போதே அவர்கள் தங்களுடைய இறுமாப்பை எல்லாம் தொலைத்தவர்களாக, இதோ இப்போது உன்னுடைய திருவடி தரிசனத்துக்காக இங்கே காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் எல்லோரும் உன்னிடம் கொண்ட அச்சத்தால், எங்கே உன்னால் தங்களுக்கும் தங்கள் ராஜ்யத்துக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தினால் வந்திருக்கின்றனர். பூதனை, சகடாசூரன், பகாசுரன் போன்றவர்களுடன் அவர்களை அனுப்பிய கம்சனையும் வதம் செய்த உன்னுடைய தோள்வலியும், வீரமும் அவர்களைப் பெரிதும் பயமுறுத்திவிட்டது போலும். அதனால்தான் அவர்கள் உன்னிடம் வந்திருக்கிறார்கள்.


ஆனால், நாங்கள் அப்படி இல்லை, உன்னிடம் கொண்டிருக்கும் அளவற்ற பிரேமையின் காரணமாக வந்திருக்கிறோம். உன்னால்தான் எங்களை அரவணைத்து ஆறுதல் சொல்லி,நல்ல வழிக்கு எங்களை அழைத்துச் செல்லமுடியும். அந்த நல்ல வழியின் முடிவிடம் எது தெரியுமா? தாமரை மலர்களையும் பழிக்கும்படி மென்மை வாய்ந்த உன்னுடைய திருவடிகள்தான். எங்கள்மீது வெறுப்பினாலோ அல்லது உனக்கு அருகில் இருக்கிறாளே நப்பின்னை அவளிடம் உனக்கு உள்ள அச்சத்தினாலோ கண்களை மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்யாதே. உன்னிடத்தே அளவற்ற பிரியம் வைத்திருக்கும் எங்கள்மேல் கருணை கொண்டு, சூரியோதய காலத்தில் மெள்ள மெள்ள மலரும் தாமரை மலரைப் போல், சூரியனையும் சந்திரனையும் போன்ற உன்னுடய கண்களைத் திறந்து எங்களைப் பார்ப்பாயாக. அப்படி நீ பார்த்தாலே போதும், எங்கள்பேரில் இருக்கிற பாவங்கள் எல்லாம் எங்களை விட்டுப் போய்விடும். எங்கள் மீது அன்பு செய்வாய் கிருஷ்ணா என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.

அடுத்த பாடலிலாவது ஆண்டாளுக்கு கிருஷ்ணனின் அருள் கிடைக்குமா..?

-க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்

Source: http://www.vikatan.com/news/spirituality/77006-andal-devotional-hymn-series-22.art



Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles