Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

தனிமையில் இனிமை:- அருணகிரிநாதர்

$
0
0


திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை-1
தனிமையில் இனிமை:- அருணகிரிநாதர்

அவ்வையாரிடம் இனியது எது என்று முருகப் பெருமான கேள்வி கேட்க அவர் கூறிய பதில் இது: ஏகாந்தமே இனிது என்று கூறிவிட்டு அதைவிட இனிது ‘சத் சங்கமே’ என்று கூறுகிறார். ஆதி சங்கரரும் பஜ கோவிந்தம் (சத் சங்கத்வே நிஸ் சங்கத்வம்…..) பாடலில் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார்.


இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே! (அவ்வையார்)
அருணகிரிநாதரும் திருப்புகழில் இதே கருத்தை ‘தனிமையில் இனிமை’ என்று வருணிக்கிறார்.

இனிமை தருமொரு தனிமையை மறைகளி
னிறுதி யறுதியி டவரிய பெறுதியை
இருமை யொருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே

என்று பாடுகிறார்.

இதன் பொருள்: இன்பத்தை தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை, வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவுசெய்ய முடியாத இருமையில் ஒருமை என்ற கருத்தை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும் (இருமையில் ஒருமை என்பது சக்தி, சிவம் என்ற பேதமற்ற தன்மை அல்லது அஹம் பிரம்மாஸ்மி= அவன் நானே என்ற அத்வைதப் பெரு நிலை)
இன்னொரு பாட்டிலும் ஏகாந்த மவுன நிலை பற்றிப் பாடுகிறார்:

பறவையான மெய்ஞ்ஞானிகள் மோனிகள்
அணுகொனா வகை நீடுமிராசிய
பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம்

இதில் பறவை மெய் ஞானிகள் என்பது பரமஹம்சர் என்பதன் மொழிபெயர்ப்பாகும். ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள் இகலோகத்தில் இருந்தும் மெய்ஞ் ஞானத்தை அடைந்தவர்களாவர். எப்படி ஹம்சம் (அன்னப் பறவை) தண்ணீரும் பாலும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அது போல ஞானிகள் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்களாவர்.
மேலும் ஹம்சம் என்ற சொல் அஹம் ச: = அவன் நானே என்ற இருமையற்ற ஒருமை நிலையை (அத்வைத) உணர்த்துவதாகும். மூச்சு வெளியே போகும் போது ஹம் என்ற சப்தத்துடனும் உள்ளே வரும் போது ச என்ற சப்தத்துடனும் வருவதாக ஞானிகள் கூறுவர்.
வேறு ஒரு இடத்தில் உபநிஷதக் கருத்துக்களை அற்புதமாகப் பாடுகிறார்:


வாசித்துக் காணொ ணாதது
பூசித்துக் கூடொ ணாதது
வாய் விட்டுப் பேசொ ணாதது
மாசர்க்குத் தோணொ ணாதது
நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது


என்று பாடி மெய்ஞ் ஞானம் அருள வேண்டுகிறார்.
பொருள்: நூல்களால் அறியமுடியாதது, பூஜை புனஸ்காரத்தால் அடைய முடியாதது, வார்த்தைகளால் வருணிக்க முடியாதது, குற்றமுடையோரால் உணர முடியாதது, அன்புடையோரிடமிருந்து விலக முடியாதது, மாயையினால் சூழ முடியாதது.

சொற்கள் எங்கு செல்லாவோ அங்குதான் மெய்ஞ் ஞானம் பிறக்கிறது என்பது உபநிஷத முடிபு. கடவுளைக் கண்டவர் அவனைப் பற்றிப் பேசமுடியாது. அவனைப் பற்றிப் பேசுபவர்கள் அவனைக் காணவில்லை என்றே அர்த்தம். இதைத்தான் தமிழில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர்.




பேசா அநுபூதி

அருணகிரி நாதரே பேசா அநுபூதி பிறந்ததுவே என்றும் சும்மா இரு சொல் அற என்றும் கந்தர் அநுபூதியில் பாடுகிறார்:

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்,
பேசா அநுபூதி பிறந்ததுவே


கடவுளைக் கண்டவர்கள் சும்மா இருப்பார்கள், மோனிகள் (மவுன நிலை) ஆகி சொல்லற்றுப் போய்விடுவார்கள். இதுதான் பேசா அநுபூதி.
ஆயினும் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். சிலர் மட்டும் பிரம்ம சாகரத்தில்= பேரானந்தக் கடலில் குதித்து முத்தெடுக்கப் போகும் முன், “அடடா, இப்பேற்பட்ட பேருண்மையை மக்களுக்கும் சொல்லிவிட்டு வருவோம்” என்று ஓடிவந்து விடுவார்களாம். அப்படிப்பட்ட ஞானிகளில் பரமஹம்சரும் ஒருவர். ஆகையால்தான் நமக்கு இந்த ரஹசியம் தெரிந்தது. ஞானசம்பந்தர், விவேகானந்தர், மாணிக்கவாசகர் எல்லோரும் இளம் வயதிலேயே இறைவனை அடைந்துவிடுவதன் ரகசியமும் இதுவே. சில ஞானிகள் தன்னுடன் மற்றவர்களையும் அழைத்துச் செல்வர். ஞான சம்பந்தர், ராம பிரான் ஆகியோர் இப்படி தன்னுடன் இருந்தவர்களையும் முக்தி நிலைக்கு அழைத்துச் சென்றனர்.


கீதையில்

கீதையில் கண்னபிரானும் ஏகாந்தம் பற்றிப் பேசுகிறார் (6-10)
யோகி யுஞ்சீத சததம் ஆத்மானம் ரஹசி ஸ்தித:
ஏகாகி யதசித்தாத்மா நிராசீ: அபரிக்ரஹ:
பொருள்: எப்போதும் ஏகாந்தத்தில் (ரஹசி) இருக்க வேண்டும் தன்னந்தனியனாய் உடலையும் உள்ளத்தையும் கட்டுப் படுத்த வேண்டும். ஆசை இருக்கக் கூடாது. உடமைகள் எதுவும் இருக்கக் கூடாது. யோகியானவுடன் இப்படி உறுதிபெற வேண்டும்.
நாமும் தனிமையில் இனிமை காணும் பக்குவம் பெறுவோம்.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles